நான் வாழ்ந்த ஊர்களிலே
நதிகள் ஓடியதில்லை
திருச்சி ஒன்று தவிர
ஆனால் நீர்நிலைகள்
ஒவ்வொன்றும் என்னை
ஏதோ ஒரு வகையில்
பாதித்திருக்கின்றன
நீர் நிலைகளின் ஒரு புறம் நான்
மறு புறம் யார் என்று தெரியாது
இடையே ஓடியபடி அல்லது
அலைந்த படி
இந்த நீர்நிலைகள்
என்னை அதிகம் யோசிக்க விட்டதில்லை
இவை
என்னை
எனக்குக் காட்டிய
அதிலும்
என் கலைந்த
நிஜ நிழல்களின் கலவையாய்
நீரில் வரைந்த பின்
நீரில் கரைந்த அந்த
முக வரிகள் அளவு கூட
நீருக்கு அப்பால் உறைந்த
முகவரிகளைக் காட்டியதில்லை
என் மதமும் ஒரு வகையில்
இந்த நீர் நிலைகள் போலத்தான்
இவை என்னை எனக்குக்
கலைந்து விடும் முக-வரிகளாகக்
கொடுக்கின்றது
எனக்குத் தெரியாத கரை ஒன்றை
என்னிடம் மறைத்து விட்டு
என்னிடம் எனக்கென்று
நான் மறுக்கவும்
இதோடு ஒன்றிப் போகின்ற
தருணங்களைக் கடந்து
காக்கவும் முடியாத
கலைந்தும் கரைந்தும் போகும்
முக-வரிகளைக் கொடுக்கின்றது
நான் இதன் மறு பக்கம் சென்று
இதை எனதாக்கிக் கொண்டால்
இது எனக்கு இன்னும் புதிதாக
என்ன தரும் என்று தெரியாது
ஆனால் அதில் ஒன்று தெரிவது மட்டும்
நிச்சயம்
அந்த முகவரிகளில் இருப்பது
கலைந்தும் கரைந்தும் நான் மீண்டும்
மீண்டும் காண்பது என் முகமாகத்
தான் இருக்கும்
அதே முகம் தான்
என் வீட்டில் தெருவில் நகரத்தின்
முடுக்குகளில் வாகன நெரிசலில்
பல யோசித்துத் தழுவி விட முடியாத
பற்பல தருணங்களில் நான்
நின்று ஒரு கணம் கூடப் பார்க்க வேண்டும்
என்று முயலாத அதே
முகமாகத் தான் இருக்கும்
என் மதம் நான் எங்கு சென்றாலும்
நான் அறிந்த ஒரு பக்கம் தான்
நதியின் அல்லது வேறு நீர் நிலையின்
மறு பக்கம் என்னிடம் எப்போதும் இல்லை
என் முகவரி என்னிடம் எப்போதும் உண்டு
என் மதம் என்பது
என் முகவரியில்
ஒரு வரி
- அவ்வளவு தான்
உண்மையில்
என் சக மனிதனுக்கு
என்னை அடையாளம்
காட்டுவது இல்லை
அந்த ஒரு வரி
ஆனால் கடவுளை
நான் வழிபடுகிறவன் என்பதற்கு
ஒரு சின்ன அடையாளம் மட்டுமே
அந்த ஒரு வரி
எனக்குப் புரிவதெல்லாம்
என்னை அணுகும் தபால் காரருக்கு
என்னை என்
விலாசத்தில்
பார்த்துவிட முடிகிறது
என் முகவரி தெரியாதவர்களிடம்
நான் எப்படி சொல்வேன்
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும்
மதம், ஜாதி, நிறங்கள் நான் இல்லை என்று
என் முகவரியில் நான் என்னை
என் மதிப்பீடுகளாக அடையாளம் காண்பேன்
தயவு செய்து இந்த முகவரிக்கு எழுதுங்கள் என்று
எப்படி சொல்வேன்
எத்தனை முறை தான் சொல்வேன்
தெரியவில்லை
இந்த நீர் நிலைகள்
நதிகள் உட்பட
என் வாழ்க்கையை இன்றும்
பாதித்த படித்தான் இருக்கின்றன
நானும் என் முகவரியை
இந்த பேதங்கள் என்னும்
காட்டாருகளுக்கும் இடையே
கரைந்து விடாதபடி
தற்காத்துக் கொண்டு தான் வருகின்றேன்
எனக்கு
இரண்டும் தான் வேண்டும்
என் முகவரி அந்த நீர் நிலை
நதியோ, ஏரியோ
நான் வளர்ந்த
என்னுடைய
என்னை எனக்குக் காட்டிய அந்த
நீர்நிலைகள்
என் வாழ்விலிருந்து
அகலப் போவதில்லை.........
வெள்ளி, 3 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
religions have become very often a stumbling block in establishing identities. it is quite apt to compare them with water bodies because rivers in modern times have become centres of disputes and not unifying links. A very creative work with depth. Muralidharan
பதிலளிநீக்குஎன் மதம் - கருத்துச்சிதறல்கள்
பதிலளிநீக்குமானிடன் மேலவன் படைப்பு
மதம் மானுடன் படைப்பு
ஆண்டவன் படைப்பு அனைத்திலும் தன்னைக்கானுகிறான்
மானுடனும் இதனையே செய்கிறான்.
அனைத்துயிர்ப்பும் அவன் செயல் - எனவே அவன் காண்பது ஒன்றே
அவன் உணர்வும் ஒன்றே - ஒன்று பலவாகாது
ஆதவன் கதிர் வெண்ணிறமே - ஆயின் முப்பட்டகம் மூலம் ஒன்று எழாகிறது.
ஒன்றும் பலவும் எங்குமே தெரியாமலும் எதிலும் நிறைந்தவனும் அவனே
அவன் ஆணா பெண்ணா அதுவா உருவமா அருவமா அவநேயறிவான்
நடந்தது நடப்பது நாளை நிகழ்வது அவன் அறியாதது ஏனும் உண்டா?
அனைத்தும் அவன் படைப்பு - உயர்வும், தாழ்வும் பிரிவும் பகையும்
கொலையும் இறுமாப்பும் அவனிருக்கும் இடத்தில் இருக்க இயலாது.
மதம் - அவனை அடைவது அனைவருக்கும் எளிது - அவன் நேசிப்பது
அன்பு, கொல்லாமை, பொறுமை, மனிதநேயம், பகிர்ந்துணர்வு மற்றவை ஒறுத்தல்
நான் காண விழைவது இத்தகு மதம் - இறைவனிடம் ஒன்றும் நல்வழிப்பாலம்
ஐயகோ!!! எங்கே மதம்? என்னால் காண இயலவில்லை - எங்குமே
பரமனிடம் பற்றில்லாமல் கற்ற மறைநூல் அனைத்தும் அந்திமத்தில்
பயனளிக்காது - செப்பினான் பாரதம் அளித்த மறைஞானத்துறவி சங்கரன்
தன்னை ஒறுத்தவர் நல்வழி காண சிலுவையில் இருந்து விழைந்தவன் இயேசு
இறைவன் இருந்தால் ஐவழி நெறி அவனிடம் சேர்க்கும் சொன்னது புத்தன்
எங்கே மதம்? எங்கே மானுடம்? ஆறு ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தில்
இல்லை இதற்கு விடை - நான் காணுவதெல்லாம் பாலைவனம்
சோலைவனமாகும் இறையருள் இவ்வுலகு வரும் சமயம்
மீண்டும் பாலைவனம் ஆகும் மதநெறி மதவெறி ஆகும்
வினாக்கள் தொடுக்கிறேன் விடையேதுமில்லை
கண்டவர் விண்டிலர் கண்டிலர் விண்டவர்
அன்புடன்
முரளி