திங்கள், 29 ஜூன், 2009

muzhumai

இதோ நான் என் காலங்களில்
கால் நனைத்து நிற்கும் பொழுது
நான் முழுமையைத் தழுவிய
அல்லது முழுமை என்னை
அணைத்துக்கொண்ட சில தருணங்கள்
அலைந்து கலைகின்றன

நான் பண்ணறேன் என்று
குழிபிறை வீட்டு வாசலில்
என் சிறிய சமையல் கட்டில்
ஆழ்ந்து சமைத்துக் கொண்டிருந்த பொழுது
என்னையும் தமக்கையையும்
சாப்பிட வரச் சொல்லி வீட்டின்
உண்மையான தளிகையுள் இருந்து
வந்த பாட்டியின் குரலில் ஒரு முழுமை இருந்தது

மெலிந்த உடலுக்கும் ஒரு மெருகு உண்டென்று
கனிந்த பார்வையில் சொன்ன தாத்தாவின்
தோற்றத்தில் இருந்த முழுமை என்னை தழுவிய
கணங்கள் இன்றும் என் வாழ்வுத் தறியில்
பிணைந்த நூலாக இன்றும் இழைகிறது

பள்ளி செல்ல என் பாட்டி என் கையில்
கொடுத்த அன்று கடைந்தெடுத்த புது வெண்ணையில்
இருந்த முழுமை பின்னர் என் வாழ்வில்
பெருகிய அத்தனை நெய்யிலும் கிடைக்கவில்லை

பள்ளி செல்லும் வழியில் நான் என்னை
மறந்து பார்த்து ரசித்த
புல் இதழ்களின் மேல்
தாழ்ந்து வரும் காற்றில்
சிலிர்ந்து கொண்டிருக்கும்
இன்று வரையிலும் நான் இனம் பெயர் அறியாத
அந்த வெள்ளைப் பூக்களில் இருந்த
முழுமை பின்னர் நான்
பார்ததுப் பார்த்துப் பூரித்த
ஹாலந்து துலிப் தோட்டங்களில்
கிடைத்ததா என்று என்னால்
உறுதியாகச சொல்ல முடியவில்லை

நாள் என்ன பொழுதென்ன என்று
கிட்டிப் புள் விளையாட போன
புழுதியில் எழுதிய அந்த
கோடை விடுமுறைகளில் இருந்த
முழுமை பின் யுரோப்ஐ சுற்றிய போது
கிடைத்ததா? சொல்ல முடியவில்லை.

(முழுமை முழுமை அடைய மீண்டும் முயற்சிக்கும்!)

1 கருத்து:

  1. இன்னும் படிக்கவில்லை இன்றே செய்வேன்
    மதம் - சிலேடை தமிழுக்கே உரியது; பொருள் செறிந்தது
    அனைத்தும் அவன் செயல் என சரணடைவது மதம்
    வேழமென வெறியுடன் அழிப்பதும் மதமே

    பதிலளிநீக்கு