செவ்வாய், 28 ஜூலை, 2009

அற்புதம், ராஜ்

ராஜ்,

அற்புதம்

நம்மில் பலர்

பல காலம் கப்பலுக்குள் பிறந்து வளர்ந்து
மெதுவாக சிறகை விரிக்கக் கற்றுக் கொண்ட
பறவைகள்

வளர்ந்ததும்
பறக்க தெரியும்
ஆனால் நெடும் கடல்
கடந்து எங்கே சென்று சேர்வோம்
என்பது சரி வரத் தெரியாது

கப்பலை விரும்பினாலும்
வெறுத்தாலும் அது ஒன்றே கதி
அதன் உள்ளே உள்ள உலகம்
தான் நமக்கு
வெளியே எங்கோ இருக்கும்
அதனை உலகங்களுக்கும்
வழி காட்டி

ஒரு சில பயணிகள்
நம்மை
பொறுத்திரு
கரை சேர்வாய் என்று
வழி காட்டுவார்கள்

ஒரு சிலர் நான் இறங்கும்
துறை முகம் இது
என்னுடன் வந்து விடு
என்பார்கள்

கரை தெரியும் போது
சிறகுகள்
குறைவான தூரம்
தெரிந்த பயணிகள்
சகவாசம் என்றெல்லாம்
சுகங்கள்
பழகியிருக்கும்

வெகு சில பறவைகள்
புதிய கரைகளை
பரீட்சித்துப் பார்க்கும்

வானத்தின்
காற்றின்
தூரங்களின்
எல்லைகளின்
பழைய பழகிய
பரிமாணங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
சோதித்துப் பார்த்தபடி

ஐம்பதற்குப் பின்
புதிய பரிமாணங்கள்

அற்புதம் தான்
அது ஒரு
இறை அருள்

நீ காத்திருக்கவில்லை
பெறுவதற்கு
அவன் காத்திருந்தான்
நீ கனிவதற்கு

மீண்டும் வருவோம் - ராஜ் ச்காட்லண்டில் இருந்து

அது என்னவோ உண்மைதான்
ஐம்பதுக்கு மேல் ஆண்டுகள் கடந்த பின்தான்
தத்துவங்கள் மெதுவாக ஆக்கிரமிக்கின்றன
வாழ்கையின் ஒவ்வொரு தடத்திற்கும்
அர்த்தம் தேட வைக்கின்றன
இத்தனை வருஷமாக இல்லாமல்
இப்போது ஏன் கர்நாடக இசையில்
ஏன் திடீரென்று ஒரு ரசனை?
பகைவனின் பகைமைக்குக் கூட ஒரு காரணத்தை கண்டுபிடிக்கின்ற
பக்குவம் எங்கிருந்து வந்தது?
அட! எப்போது அளவாக உண்ணத் தொடங்கினேன்?
இப்போதெல்லாம் எலிப் பந்தயம் ஏன் என்னைத்
தொந்தரவு செய்வதில்லை
சின்னச் சின்ன வாழ்க்கைத் துளிகளை ரசிக்கத் முடிகிறது
பூக்களை, மலையை, மடுவை
வீட்டு வாசலில் ஓடி படுங்குகிரா முயல் குட்டிகளை
பார்த்து மெய் மறந்து போக முடிகிறது
இவ்வளவு நாட்களாக இல்லாமல் ஏன் இப்போது?
ஆம் ஐம்பது ஆகி விட்டது..
உண்மையான வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பிக்கிறதோ?

நன்றி கோபாலனுக்கு

முரளியின் தமிழ்ப் பற்று கண்டு மகிழ்ச்சி

மேலும் மேலும் எழுதி அனுப்புங்கள்

நான் ஒரு நம்பிக்கையுடன் ரசிகன்

கோபாலா! பாலைவனத்தில் மட்டும் தனிமை இல்லை. இங்கே குறிஞ்சி நாடுதான்; குடும்பத்தோடுதான்; ஆனாலும் தனிமை சமயத்தில் தலை காட்டுவதுண்டு.

வலைப் பயணம் ஓர் சரியான மருந்து இதற்க்கு. நேரம் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும்ப் போதெல்லாம் எழுத முயற்சி செய்வேன்

மீண்டும் வருவோம்

ராஜ்

என்ன ஆயிற்று கோபால் - முரளி வெ

என்ன ஆயிற்று கோபால்
வெள்ளமென சிந்தனைகள்
அணை கடந்து கடலாக..

செருப்பின் சரித்திரம்
பாதங்கள் ஓயும் வரை
பாதங்கள் ஓயட்டும்
சுவாசம் ஓயும் போது


வாழ்த்த வயதுண்டு
வாழக்கைக்கு பொருளுண்டு
பல்லாண்டு வாழ்க
எம்மை மகிழ்விக்க


அன்புடன்


முரளி

ஜோட் ரிப்பேர் - ராஜ் ச்காட்லண்டில் இருந்து

நண்பனே!

நீ எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாய். எழுது. எழுதிக் கொண்டேயிரு.

எண்ணத்துக்கு ஒரு ஸ்பீட் லிமிட் இருந்தால் உன் எண்ணத்தின் ஸ்பீட் என்னவாயிருக்கும் என்று யோசிக்கிறேன்.

இங்கே ஒவ்வொருவர் வீட்டிலும் டஜன் கணக்கில் காலணிகள்
நம்ம ஊர் ஜோட் ரிப்பேர்க்காரனைப் பற்றி சிந்திக்கிறேன்
அவனைப்பற்றி முடிந்தால் எழுத முயற்சி செய்வாயா?

ராஜ்

பரிந்துணர்வின் எல்லை - முரளிதரன்.வெ

பரிந்துணர்வின் எல்லை

ராஜ் டிவி காட்டுகிறது
கண்ணன் என மழலையை
குறும்பு செய்வான் பொய் சொல்வான்
திருடுவான் தாயினும் சாலப்பரிவான்


அவனை வெறுப்பாரில்லை அன்றி
ஒருப்பாரில்லை அவனைக்கண்டதும்
காதல் மட்டுமே


கம்சன், துர்யோதனன் கண்டனர் ஒரு
மாயாவியை - கோபியர் கண்டதோ
அன்பின் பெருக்கை - பாண்டவர்
கண்டவன் பக்தவத்சலன்


பலர் மடிந்தனர் பலர் செழித்தனர்
உவகையும் உக்கிரமும் அவரர்
அறிந்தது - அவன் காட்டியது
அன்பு மட்டுமே


அவனை அளவிட்டவர் யாருமிலர்
அவன் அன்பின் எல்லையை எவரும்
அறிந்திலர் - போற்றுவரும் தூற்றுவரும்
அவனுக்கு சமமே.


அன்புடன்


முரளி

நன்றி ganakkirathu

அபரிமிதமான உற்சாகம் உங்களிடம் இருந்து
கடல்கள் கடந்து வந்து சேர்ந்தது

நன்றி கனக்கிறது -
என் சொற்கள் என் உணர்வின் முன்
தோற்றுப் போகின்றன

இங்கே பாலைவனத்து வாழ்க்கை
தனிமை
வெளியே எப்போதாவது
சுழலும்
தூசி மண்டலத்தைப் பற்றிய
எப்போதும் நீங்காத அசூயை
என்னை
என் ஐம்பதுக்கும் அதிகமான
ஆண்டு வாழ்க்கை எனும்
உண்டியலைத் திறக்க வைத்து விட்டன
ஒவ்வொரு காசாக எடுத்து
அடுக்கத் துவங்கி உள்ளேன்
இன்னும் வெகு நேரம் ஆகும்
எல்லாவற்றையும் அடுக்க!

மறு ஜன்மத்தில் நம்பிக்கை வருகிறது!

என் வெற்றுப் பாதங்களுடன்
மீண்டும் நடை பழகுவேன்
எனக்குப் பெரியதான ஷூக்களில்,
எப்போதும் போல.

இந்த வலைப் பயணத்துக்கு
பிள்ளையார் சுழி போட்ட
ராஜ கோபாலனுக்கு ஒரு
பிரத்யேகமான நன்றி

ஞாயிறு, 26 ஜூலை, 2009

சில செருப்புகளும் ஷூக்களும்

உலக சரித்திரத்தில்
செருப்புகளும் ஷூக்களும்
நீடித்து தடயம் பதிப்பவை
நம் இதிகாசம்
ராமாயணத்திலோ
பரதன் காத்த
பாத தூளிகைகள்
தூய அன்பின்
காலத்தால் அழிக்க முடியாத
சின்னங்கள்

புஷ், சிதம்பரம் மற்றும்
அத்வானி மூவருக்கும்
பொதுவான ஒரே விஷயம்
ஏதாவது உண்டென்றால்
அவர்களை நோக்கி எறியப்பட்ட
ஷூக்கள் தான்

நினைத்துப் பாருங்கள்
உங்கள் வாழ்க்கையில்
முதல் முதலாக நீங்கள்
பார்த்த செருப்பு யாருடையது
முதல் முதலாக நீங்கள்
பார்த்த ஷூ யாருடையது
உங்களுக்கு முதல் முதலாக
செருப்பை அணிவித்து பார்த்த
கடை எங்கே இருக்கிறது
அப்போது உடன் யார் இருந்தார்கள்
என்றெல்லாம்
செருப்புக்களும் ஷூக்களும்
உங்கள் சுய சரித்திரத்தின்
காலக் கோர்வையை
கையில் கொண்டு வந்து
கொடுத்து விடும்

நினைத்துப் பார்க்கிறேன்
நான் முதலில் பார்த்த செருப்பை
யூகிக்கத்தான் முடிகிறது
அக்கா, அம்மா, அப்பா
இவர்களின் செருப்புகளில்
ஒன்றாக இருக்குமோ
பாட்டியின் செருப்பைப்
பார்த்ததாகவே நினைவில்லை
இது என்னை நெருடி உலுக்குகிறது
பாட்டி எப்போதாவது அணிந்திருப்பார்
வேண்டும் என்னும் போது
என்று சமாதானம் செய்து கொள்கிறேன்

அம்மா செருப்பு தான்
நினைவில் வருகிறது
அம்மாவின் செருப்பு பெரியது
கடையில் பெண்கள் பகுதியில்
கிடைக்கவே கிடைக்காது
பாதம் பெரியது என்பதால்
ஆண்களுக்கான செருப்பை தான்
வாங்க வேண்டும்
அப்பாவின் செருப்பும் நினைவுக்கு
வந்தாலும் அவர் காட்டிய
புரிந்து கொள்ள முடியாத
கோபங்கள் இப்போதும் அவை மீது
என் நினைவுப் பார்வையை
தவிர்க்க செய்கின்றன

என் வீட்டு மனிதர்கள்
யாருக்கும் பொதுவாக
ஒரு ஜோடிக்கு மேல்
செருப்புகள் இருந்தது இல்லை
ஒரு ஜோடியின்
விதிக்கப் பட்ட
வாழ்க்கை நீட்டிக்கப்பட்டு
அதுவும் முடிந்த பின் தான்
அடுத்த ஜோடி
இப்போது போல ஷூ ராக்கை
திணறடிக்கும் பற்பல ஜோடிகள்
எங்கள் காலத்தில்
அல்லது எங்கள் குடும்பத்தில்
இருந்தது கிடையாது
எங்கள் வீட்டின் ஒரே
சிறு பெண் தமக்கையைக் கூட
நிறப் பொருத்தத்துடன்
காலணி அணிந்து பார்த்து இல்லை

மகாத்மா காந்தியை
மிகச் சுலபமாக
அடையாளம் காட்டியவை
அவர் கண்ணாடியும், காலணிகளும்
மற்றும் அந்தக் கைத் தடியும் தான்

இன்றும் இவற்றை மட்டும்
வரைந்து விட்டு மற்ற இடத்தை
வெற்றிடமாக விட்டு விடுங்கள்
ஓர் இனம் புரியாத சோகம்
உங்களைக் கவ்வினால்
ஆச்சர்யப் படுவதற்கு இல்லை

நம் கடந்த காலத்தின்
சுவடுகளின் ஒருமித்த
உருவகம் ஆகும்
இந்த செருப்புகள்
நம் எதிர் காலத்தின்
விளிம்பில் நின்று நம்மை
நாம் கற்பனை செய்து
கொண்ட,
நம் வார்ப்புகளின்
முன்னோடியாகவும் இருந்ததுண்டு

எப்போ நான் பெரியவனாவேன்
என்ற கேள்வி நம்
மனத்திரையிலோ
நாக்கிலோ
நடம் ஆடுவதற்கு முன்னால்
நம் பாதங்களால்
ஒத்திகை செய்யப்படுவது
பாதங்களை விடவும்
பெரிய செருப்புகள் மூலம் தான்

இந்த கேள்வி
நம்மை விட்டு எப்போதாவது
நிரந்தரமாக
விலகியதா என்று
சொல்வது கூட கடினம் தான்

நம் பாத அளவு
முடிவாகிப் போன போதும் கூட
எப்போ நான் பெரியவனாவேன்
என்னும் கேள்வி நம்
பாதங்களை
நம் செருப்புகளை விடப்
பெரிய செருப்புகளைத்
தேடி
அணிந்து பார்க்கச்
சொல்லிய வண்ணம்
தான் இருக்கின்றது

எங்கள் வீட்டு வாசலில்
மாலை நேரம்
ஏகப் பட்ட காலணிகள்
விதம் விதமாய்
பார்த்திருக்கின்றேன் இளம் வயதில்

இவற்றின் உரிமையாளர்கள்
அம்மாவின்
வகுப்புக்காக காத்திருக்கும் நேரம்
சாயும் காலம் மரங்களில் அமர்ந்து
சல சலக்கும் பறவைகள் போல்
பேசும் பாலகர்கள்
பெரும்பாலும் சிறுமிகளின்
குரல்களின் ஒருமித்த சத்தத்தில்
எனக்குக் கிடைத்த
இனம் புரியாத நல்லுணர்வு
அறிவைப் போல்
அதைப் பகிர்வதைப் போல்
உலகம் முழுதும்
நாடக் கூடிய
செழுமையோ வளமையோ ஒன்று
இல்லை என்றே என்னுள் பதிந்தது

அந்த செருப்புகள் அத்தனையும்
அகன்ற பின்
வீட்டினுள் நிலவும்
பேரமைதியின் இடையில்
வாசலில் ஓய்வெடுக்கும்
தன் தேய்ந்து போன
செருப்புகள் அளவு கூட
ஓய்வெடுக்க இயலாத
அன்னையின் அருகே எரியும்
மேஜை விளக்கும்
அவரது காலத்தை
சோதித்து வெல்லும்
படிப்புகளும்
எனக்குக் கொடுத்த
இனம் புரியாத
சாதனை வேகம்

இன்றும் என்னை என்
பாதங்களுக்குப் பெரிய
ஷூக்களில் நுழைந்து
நடை பழகிப் பார்க்கும்
இடறி விழுந்த போதும்
எழுந்து மீண்டும் முயலும்

துணிவுக்கு
துணை போகின்றது

நம் பயணங்களில்
சிலர் செருப்புகளும்
சிலர் ஷூக்களும்
தொடரும் போது
தலை முறை தலை முறையாக
தொடரும்
போராட்டப் பயணங்கள் கூடப்
புரியத் தான் செய்கின்றன

(பயணம் தொடரும்
பாதங்கள்
உறங்கும் வரை)

சனி, 25 ஜூலை, 2009

இன்று ஒன்று

இரவின் வெளிச்சங்கள் என்
இதயம் வரையும்
ஒரு புதிய நாளின்
உதயம் வரையும்

தங்களைக் கரைத்துக் கொண்டு
இந்த வெளிச்சங்கள்
உறக்கத்துக்குப் பின்னர்
விழிப்புக்கு முன்னர்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என்று உபசரிக்கும்
நான் உறங்கும் வரை
காத்திருந்து அனுசரிக்கும்

நேற்றின்
தடயங்களை
அழித்துக் கொடுக்கும்
ஒரு புதிய சாலையை
ஒரு புலர்ந்த காலையை

ஒரு மகத்தான
பிரகாசத்துடன்
உயிர் துடிப்புடன்
இயங்கும் நகரம்
கை கட்டிக் கொண்டு நிற்கும்
'ஏவு, என்ன வேண்டும்?'
என்று கேட்கும் பட்டணத்து பூதம் போலும்

நூறாயிரம் புது உயிர் செல்களை
இந்த முடிந்த இரவு
என்னிடம் ஒப்படைத்து விட்டு
தூக்கம் கலங்க நிற்கும்
பள்ளிக்கு என்னை அனுப்பி விட்டு
தெரு முனையில்
என் உருவம் கரையும் வரை பார்த்த
என் அன்னை போலும்
'இன்று போய் இன்றே வா' என்னும் பாவத்துடன்

குளிப்பதற்கு முன்னும், பின்
அலுவலகம் அடைந்ததும்,
பிறகு சந்திப்புகளிலும் என்று என்னை
என் நாள்
பற்பல உபசரிப்புகளுடன் கொண்டாடும்

நூறு செய்திகள்
கலந்துரையாடல்கள்
இறந்த காலத்தின் எச்சங்கள்
நாளையைப் பற்றிய அச்சங்கள்
இன்னும் எத்தனையோ மிச்சங்கள்

பணிவிடத்தின்
வெள்ளை காலர் துரைத்தனங்கள்
மதிய உணவுடன்
புதிய பானங்களுடன்
சிலரின் புகை வெளிப்பாடுகளுக்கு இடையே
சுழலும்

இரவின் வெளிச்சங்கள்
மீண்டும் தழுவும் சமயம்
பழகிய தலைக்கடியில்
இன்று முழுதும் இது
என்ன செய்து கொண்டிருந்தது என்று
கேட்க நினைத்தும்
'நமக்கென்ன ஆயிற்று'
என்று முனகிய படி
அந்த இரவின்
கடைசி ஒளிதுளியின்
பிரிவுக்கு தயாரான படி,
நெளிந்த படி
அடங்கிப் போகும்
என் தலையணை
என்
இன்று
ஒன்று போலவே!

புதன், 22 ஜூலை, 2009

மீண்டும் இவள்.....

யுகங்கள் மாறினால் தான் என்ன
நகங்கள் கீறினால்
ஆறுமோ காயங்கள் ?

மீண்டும் இவள்
புறப்பட்டாள்

வீட்டில்
வெளியில்
நெரிசலில்
அலுவல் வழிசலில்

மீண்டும் இவள்
புறப்பட்டாள்

குடும்பம் என்னும்
ஒரு கனவை
ஒரு பிடிப்பை
ஒரு துணையை
ஒரு விழிப்பை
விட முடியாது
மீண்டும் இவள்

கருக்கலில்
சமையலில்
கரை சேர முடியாத
நெருக்கடிகள்
அலைகளைப் போல்
நெருடலுடன் தொடர்கின்ற
நெருஞ்சிமுள்
படுக்கையில் சாயும் வரை
நூறு முறை
மீண்டும் இவள்

தன் கண்களின் ஈரத்தை
சிறிதளவு
பகிர்ந்து கொள்ளலாம்
என்ற நப்பாசையில்
வீடு திரும்பும் போதெல்லாம்
இவள் ஓரப் பார்வைகள்
சந்திப்பதோ

ஏற்கனவே
நனைந்திருக்கும்
ரோபோக்களின் கண்கள்,
கேளிக்கைக்கு
இழந்த
இவற்றின் ஈரம்
மீண்டும் வனவாசம்
சென்ற சீதைக்காகவா
அல்லது
சுயம்வரம்
விளையாடும் நடிகைக்காகவா
என்று புரியாதபடி!

யுகங்களின்
மாறுதல்களைப்
புறக்கணிப்பதே
ஒரு தவம் போலும்

சளைக்காமல்
அடுக்களைக்குள்
செல்வாள்

மீண்டும் இவள்!






ஞாயிறு, 12 ஜூலை, 2009

திருமூர்த்தி அணையில் புதைந்த வரலாற்று சின்னங்கள்

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=1362

இன்று கோவில் கோவிலாக

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

ஓவியங்கள் அழிக்கப்பட்டது பற்றிய

செய்தி இந்து நாளிழதில் வந்து

ஆறாத காயத்தை

மனதுக்குக் கொடுத்தது

.............

இந்த செய்தி ஒரு

சிறு ஒத்தடமாக

அமைந்தது போலும்

....

நன்றி, தினமலரே, நன்றி!

வெள்ளி, 3 ஜூலை, 2009

என் மதம்

நான் வாழ்ந்த ஊர்களிலே
நதிகள் ஓடியதில்லை
திருச்சி ஒன்று தவிர
ஆனால் நீர்நிலைகள்
ஒவ்வொன்றும் என்னை
ஏதோ ஒரு வகையில்
பாதித்திருக்கின்றன

நீர் நிலைகளின் ஒரு புறம் நான்
மறு புறம் யார் என்று தெரியாது
இடையே ஓடியபடி அல்லது
அலைந்த படி
இந்த நீர்நிலைகள்
என்னை அதிகம் யோசிக்க விட்டதில்லை

இவை
என்னை
எனக்குக் காட்டிய
அதிலும்
என் கலைந்த
நிஜ நிழல்களின் கலவையாய்
நீரில் வரைந்த பின்
நீரில் கரைந்த அந்த
முக வரிகள் அளவு கூட
நீருக்கு அப்பால் உறைந்த
முகவரிகளைக் காட்டியதில்லை

என் மதமும் ஒரு வகையில்
இந்த நீர் நிலைகள் போலத்தான்
இவை என்னை எனக்குக்
கலைந்து விடும் முக-வரிகளாகக்
கொடுக்கின்றது
எனக்குத் தெரியாத கரை ஒன்றை
என்னிடம் மறைத்து விட்டு
என்னிடம் எனக்கென்று
நான் மறுக்கவும்
இதோடு ஒன்றிப் போகின்ற
தருணங்களைக் கடந்து
காக்கவும் முடியாத
கலைந்தும் கரைந்தும் போகும்
முக-வரிகளைக் கொடுக்கின்றது

நான் இதன் மறு பக்கம் சென்று
இதை எனதாக்கிக் கொண்டால்
இது எனக்கு இன்னும் புதிதாக
என்ன தரும் என்று தெரியாது

ஆனால் அதில் ஒன்று தெரிவது மட்டும்
நிச்சயம்
அந்த முகவரிகளில் இருப்பது
கலைந்தும் கரைந்தும் நான் மீண்டும்
மீண்டும் காண்பது என் முகமாகத்
தான் இருக்கும்
அதே முகம் தான்
என் வீட்டில் தெருவில் நகரத்தின்
முடுக்குகளில் வாகன நெரிசலில்
பல யோசித்துத் தழுவி விட முடியாத
பற்பல தருணங்களில் நான்
நின்று ஒரு கணம் கூடப் பார்க்க வேண்டும்
என்று முயலாத அதே
முகமாகத் தான் இருக்கும்

என் மதம் நான் எங்கு சென்றாலும்
நான் அறிந்த ஒரு பக்கம் தான்
நதியின் அல்லது வேறு நீர் நிலையின்
மறு பக்கம் என்னிடம் எப்போதும் இல்லை
என் முகவரி என்னிடம் எப்போதும் உண்டு

என் மதம் என்பது
என் முகவரியில்
ஒரு வரி
- அவ்வளவு தான்
உண்மையில்
என் சக மனிதனுக்கு
என்னை அடையாளம்
காட்டுவது இல்லை
அந்த ஒரு வரி
ஆனால் கடவுளை
நான் வழிபடுகிறவன் என்பதற்கு
ஒரு சின்ன அடையாளம் மட்டுமே
அந்த ஒரு வரி

எனக்குப் புரிவதெல்லாம்
என்னை அணுகும் தபால் காரருக்கு
என்னை என்
விலாசத்தில்
பார்த்துவிட முடிகிறது

என் முகவரி தெரியாதவர்களிடம்
நான் எப்படி சொல்வேன்
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும்
மதம், ஜாதி, நிறங்கள் நான் இல்லை என்று

என் முகவரியில் நான் என்னை
என் மதிப்பீடுகளாக அடையாளம் காண்பேன்
தயவு செய்து இந்த முகவரிக்கு எழுதுங்கள் என்று

எப்படி சொல்வேன்
எத்தனை முறை தான் சொல்வேன்
தெரியவில்லை

இந்த நீர் நிலைகள்
நதிகள் உட்பட
என் வாழ்க்கையை இன்றும்
பாதித்த படித்தான் இருக்கின்றன
நானும் என் முகவரியை
இந்த பேதங்கள் என்னும்
காட்டாருகளுக்கும் இடையே
கரைந்து விடாதபடி
தற்காத்துக் கொண்டு தான் வருகின்றேன்

எனக்கு
இரண்டும் தான் வேண்டும்
என் முகவரி அந்த நீர் நிலை
நதியோ, ஏரியோ
நான் வளர்ந்த
என்னுடைய
என்னை எனக்குக் காட்டிய அந்த
நீர்நிலைகள்
என் வாழ்விலிருந்து
அகலப் போவதில்லை.........