செவ்வாய், 5 மே, 2009

என் முதல் தபால் ஆபீஸ்

என் வாழ்க்கையில்
சில நிகழ்வுகளுக்கு
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய பெருமை உண்டு

நான் முதல் முதலாக
தபால் ஆபீஸ் சென்று
காசைக் கொடுத்து
தபால் தலை பெற்று
அம்மா கொடுத்த தபால்களைப்
பெட்டியில் போட்டது
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய முதல் தருணங்களில் ஒன்று

இந்த ஓர் அலுவலில்
நிறையப் பொறுப்பு இருந்தது
ஒரு பொது மக்கள் புழங்கும் இடத்தில்
யாரைக் கேட்டு எதைப் பெற வேண்டும்
கொடுத்த பணத்திற்கு தபால் தலை
கிடைத்ததா என்று பார்க்க வேண்டும்

சரியான அளவு தபால் தலைகளை
ஒவ்வொரு தபால் மீதும்
பசை தடவி பொருத்த வேண்டும்
இதற்கு இவ்வளவு என்று அம்மா
சொன்னது சரியாக ஞாபகம்
வர வேண்டும்

திரும்பி வருகையில் பாக்கி
தபால்தலைகளை
தொலைக்காமல் வீட்டுக்கு
கொண்டு வர வேண்டும்

பொறுப்பாக முடித்த
வேலைக்கு வீட்டுக்கு
வந்தவுடன் கிடைக்கும்
ஏதோ ஒரு சிறப்புச்
சிற்றுண்டி

கை கால் கழுவி
விட்டு சாப்பிடச்
செல்லும் பொழுது
தபால் அலுவலகத்தில்
திறந்தபடி மூக்கைத்
திணறடித்த
பசை நாற்றம்
ஏனோ கையை விட்டு நீக்கத்
தயக்கம் ஒன்று வந்து போகும்
ஏதோ வளர்வதைக் குறைத்து விடும் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக