வியாழன், 7 மே, 2009

சில மௌனங்கள்

சில மௌனங்கள்
ஓசையை மிஞ்சி விடும்
மனதின் உள்
சலனம் ஏற்படுத்துவதில்

சிறு வயதில் சகோதரர்களுடன்
ஏற்பட்ட சண்டை சச்சரவு
பெரியவர்களின் மத்யச்தத்தில்
முடிவுக்கு வந்ததும் ஏற்படும்
மௌனம் ஒரு மாதிரி தான்

மனைவியிடம் விவாதம்
கசப்பாக முடிவது
ஒரு மௌனத்தில்
கொண்டு விட்டு விட்டால்
அன்று முழுதும் இந்த மௌனம்
ஒன்று போதும்
மனதை நாள் முழுக்க
அலைக்கழிக்க

ராத்திரி விவாதம் மகளோடு
ஏற்படாமல் இருந்தால்
தேவலை
அவள் முதுகைக் காட்ட
ஆறுதல் சொல்ல நினைத்தால்
எச்சரிக்கை உடனே வந்து விடும்
என்னதான் இருந்தாலும்
குழந்தையிடம் நீங்கள்
இப்படி பேசியிருக்க வேண்டாம் என்று
அதன் பின் வீட்டில் சூழும் மௌனமோ
கோரம்

நாள் முழுதும் குழந்தையுடன்
உறவாடும் அன்னை ஒருத்தி
சொன்னால் அது
தூங்கும் போது வீட்டில்
நிலவும் மௌனம்
ரொம்பவும் கோரமாக இருக்கிறது என்று

மரணத்துக்கு பிறகு
ஒரு வீட்டில் நிலவும்
மௌனம் தான் எவ்வளவு
கொடுமையானது
அதன் அழிவு பூர்வமான
சக்தியை சமன் செய்யத்தான்
எவ்வளவு ஒப்பாரி தேவையாக இருக்கிறது

விவாதம் இருக்க வேண்டிய
மேலாண்மைத் தளங்களில்
மௌனம் ஆளுமையின்
மரணத்தைப் போல் ஆகிறது

திரௌபதியின் வஸ்திரம் அபகரிக்கப்பட்ட
போது சபையில் நிலவிய மௌனம்
கொடுமையானது
ஆண் வர்க்கத்தை இன்றும் தலை
குனிய வைப்பது

கொலையுண்ட மக்களின்
சந்ததியினர் வருடக் கணக்கில்
சந்திக்கும் நீதி மன்றங்களின்
மௌனம்
ஒரு தேசத்தையே
பாதிக்கப்பட்ட சமூதத்தின் முன்
தலை குனிய வைத்துவிடுகிறது

அடித்தட்டு மக்களின்
மீது இழைக்கப் படும் கொடுமைகளுக்கு
அவர்கள் கட்டும் மௌனம்
அடிமைத்தனம் என்றால்
அதை எதிர்த்து மேல்தட்டு
மக்கள் மௌனம் சாதித்தால்
அது பேடித்தனம்

ஒரு அநியாயத்தை எதிர்த்து
பேசாது மௌனம் சாதிப்பது
அதற்கு துணை போவதற்கு
சமானம் ஆகும்

மௌனங்கள் அநேகமாக
நம்மை நமக்கு
அடையாளம் காட்டும்
கருவிகள் தான்

நன்றி சொல்லும் பொழுது
வார்த்தைகள் கிடைக்காமல்
போகும் மௌனம்
மகிழ்ச்சி மேலீட்டில்
கண்கள் நனைந்து தோன்றும்
மௌனம்
ஒவ்வொரு மௌனமும்
அழகு தான்

பிரிவில் தோன்றும் மௌனம்
காதலரை வாட்டி விடுகிறது
இன்றைய சாதனங்கள்
ஒலி வெள்ளத்தில் அமிழ்த்தினாலும்
அந்த வெள்ளம் வடிந்து
பெருகும் மௌனம்
அலாதி தான்

கொலையின் முடிவில்
கசியும் மௌனம்
கொலைகாரனையும்
கலங்க வைத்து விடும்

துரோகத்துக்கு பதில்
ஆவேசமான பேச்சு
கிடைத்தால் ஒரு விதத்தில்
அந்த துரோகம்
கையாளப்பட்டு விடும்
அதற்கு பதில் மௌனம்
கிடைத்தால் அது நரக வேதனை
தான் தரும்

ஆக மௌனங்களின் முன்
வார்த்தைகள் ஒன்றும் இல்லை
மனசாட்சி போல
உரத்த மௌனம் உலகில்
ஏதும் இல்லை
அதை பேச விடு
கூர்ந்து கேள்
உன் வார்த்தைகள் குறையும்
மௌனங்கள் மிகும்
அதனுடன் செயலும் திறனும்

மௌனம் பழகு
அது மனத்தின்
ஆத்மாவின் அழகு!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக