புதன், 6 மே, 2009

தமிழன் ஒரு கேள்விக் குறி?

யாம் அறிந்த முதுகுகளில்
தமிழன் முதுகு போல்
வளைவாவது எங்கும் காணோம்!

தமிழன் வளையும் போது
விடையும்
நிமிரும் போது
கேள்வியும் ஆகிற
வினோத பேர்வழி

ரசனை இவனுக்கு பிரதானம்
ஒரு நல்ல ரசிகனாக
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
தமிழன் எவ்வளவு தொலைவும்
செல்வான்

தலைமை இவனுக்கு பிரதானம்
தலைவன் என்று ஒருவரை
ஏற்றுக் கொண்டு விட்டால்
இவன் தலைவனுக்கு
தன் தலையையும்
கொடுக்கத் தவற மாட்டான்

இவன் வெளியுலகம்
முழுவதையும்
ரசித்து ஏற்பவன்
பிற மொழிகளை பேசுவான்
அவற்றில் தமிழ் தொனிப்பது
கேலிக்கு ஆளானாலும்
இவன் பொருட்படுத்துவதில்லை

தமிழனை ஆளுவது
பொதுவாக சுலபம்
பணியிடம் ஆனாலும் சரி
தன் மேலாளர் ஆனாலும் சரி
தன் நல்ல பெயர் கெடக் கூடாது
என்பதற்காக
உயிரையே விடுவான்

தமிழன் முதுகு
எல்லாருக்கும் பிடித்திருப்பதில்
ஆச்சர்யப் படுவதற்கு
ஒன்றும் இல்லை
தலைமையின் முரண்பாடுகள்
இவனுக்கு ராஜதந்திரத்தின் ரசனை

கால காலமும்
ஒரு தலைமை
அதற்காக ஒரு உயிர்
அதற்காக ஒரு உடல்
அதற்காக ஒரு பிறவி
ஒரு முதுகின் மேலே
ஒரு குடும்பம்

இத்தனை அழகில் ஒளிரும்
முதுகின் மேலே
உப்பு மூட்டை விளையாட
யாருக்குத் தான் ஆசை வராது?
இத்தனை கட்சிகள்
உதயம் ஆனதில் என்ன
பெரிய ஆச்சர்யம்?
ஏந்தி நிற்க இத்தனை
முதுகுகள் இருக்கையில்
ஏறி அமர தலைவர்கள்
குறைவாக இருந்தால் அது
தமிழனுக்கு எவ்வளவு
அவமானம்!

சுமை தாங்க ஏங்கும்
தமிழன் சுமைகள்
போதுமான அளவுக்கு
கிடைக்கா விட்டால்
அவன் வாழ்வு
அர்த்தம் கிடைக்காமல்
வீண் ஆகி விடாதோ?

இப்போது தமிழன்
ஆடும் உப்பு மூட்டை விளையாட்டுக்கு
நாற்பது நாற்பது என்று பெயரிடலாம்
அது என்ன இரண்டு நாற்பது என்கிறீர்கள்
நம் இலக்கியத்தில் நாற்பது
ஒரு அற்புதமான இடம் வகிக்கிறது
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
நம் இலக்கியத்தின் சான்றுகள்

இந்த பதிமூன்றாம் தேதி
தமிழகம்
புதியதொரு நாற்பதை படைக்குமா?
தமிழன் முதுகு நிமிர்ந்து
தமிழன் விடையில் இருந்து வெளிப் பட்டு
கேள்வி ஆவானா?
அவன் முதுகு வெறும் உப்பு மூட்டை அல்ல
அது சருக்கவும் செய்யலாம்
என்று உணர்த்துவாநோ நம் தமிழன்?

உணர்ச்சியில் உருகி விடாமல்
உண்மைகளைத் தேர்ந்து புரிந்து கொண்டும்
அடிமை தாழ்வு மனப் பான்மைகளில் இருந்து
விடுபட்டும்
தற்சார்புடனும் சுதந்திரத்துடனும்
வாக்குப் போட முடியுமா தமிழனால்?

சாது மிரண்டால்
காடு கொள்ளாது
தமிழன் மிரண்டால்
நாடு கொள்ளாது!

தமிழா நீ விழிக்க வேண்டும்
விழித்த உடனேயே
நிமிர்ந்து எழுந்திருக்க
வேண்டும்
சரிந்து விழும் ஒட்டுண்ணிகளை
புறக்கணித்து விட்டு
நேர் கொண்ட பார்வையுடன்
புதியதொரு
சகாப்தம் படைக்க வேண்டும்
அது தமிழ் பேசும் உலகம் முழுவதற்கும்
புதியதொரு நம்பிக்கையாக
மலர வேண்டும்

செய்வாயா தமிழா?
செய் அல்லது
செத்து மடி!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக