உன் அகம்
புது வரவால் புது உறவுகளால்
விரிந்ததில் பூரித்திருக்கும்
அதன் வரவேற்புகளில்
உன் மீது இருக்கும் உற்சாகம்
அவள் மீதும்
அதே போல இருக்க வேண்டும்
என்று நீ நினைத்தாலும்
ஆணாதிக்க சமூகத்தின்
ஆர்ப்பரிப்புகளில் அது சாத்தியம் இல்லை
அவள் மீது உற்சாகம் இருந்தாலும்
ஒரு சில பயங்கள்
ஒரு சில சந்தேகங்கள்
ஒரு சில எச்சரிக்கைகள்
இருபக்கமும் கலந்த உற்சாகமே அது
உன் அகம்
ஒரு மாறுதலை
எப்படி எடுத்துக் கொண்டு
செயல் படுகிறது என்பதில்
உனக்கு கவனம் தேவை
உன் வாழ்க்கை
இது வரை உன் அகத்தின்
உள்ளும் புறமும்
பற்பல சுதந்திரங்களுடன்
அமைந்திருந்திருக்கும்
அந்த அகம் இப்போது மாறும்
அகம் முழுக்கவும்
உன்னை விடவும்
உன் மீது உரிமைகளை
சரளமாக கொண்டாடக்கூடிய
ஒவ்வொருவரை விடவும்
மாறுதல்களின் மேலாண்மை
அவளிடம் அதிகம் கேட்கப்படும்
விளைவுகள் அவள் பெயரில்
எழுதப்படும்
எனவே அவள் உன்னிடம்
பகிர்ந்து கொள்ள வேண்டிய
மாறுதலின் இடையில் தேறுதல்
மாறுதலின் இடையிடையே சோருதல்
அனேகமாக இருக்கும்
உன் காதுகளை தயாராக
வைத்திருப்பது மிக அவசியம்
இது ஒன்றும் இனிய காதல் உரையாடல் அல்ல
பொறுமையுடன் அலசி ஆராய்ந்து
இருவரும் இரு பக்கங்களையும்
பார்க்க வேண்டிய பரிசோதனை சாலை
உன்னைப் போல்
நினைத்த பொழுது
சொல்ல வேண்டியதை சொல்வது
அவளால் இயலாதது
அவளால் இயலும் என்றால்
மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள
அதனால் உட்படவும்
உன்னாலும் புரிந்து கொள்ள முடியாதது
இது சொல்ல நிறைய யாரிடம்
உள்ளதோ அவரிடம்
சொல்ல தயக்கமும்
தடையும் மிகும் ஒரு காலம்
காலப் போக்கில் இது மாறும்
ஆனால் இந்த தடைகளை நீ
நீக்க மாட்டாய் எனில்
நீக்காத ஒரு பழி உன்னைப் பார்த்து
ஏதோ ஒரு வகையில் கணக்கு
தீர்க்க வந்த படி இருக்கும்!
பரிவுடன் கேட்கும் திறன்
முன் எப்பொழுதையும் விட உனக்கு
இப்போது தான் தேவை
நீ ஆண் - தேர்ந்தெடுப்பவன்
என்றொரு மாயை
திரை உன் கண்ணை மறைத்திருக்கும்
ஆண் மகனாக உன் தேர்ச்சிகள் இப்போது தான் ஆரம்பம்
உனக்கு முழுமையாக
தெரியாத உன் அகம்
உனக்கு மீண்டும் தெரியாமலே
மாறிக்கொண்டிருக்கும் உன் அகம்
உன்னை உனக்குக் காட்டும்
ஒரு புதிய கண்ணாடியுடன் உன் அகம்
உன் நேரம் உன் கவனம் உன் புரிதல்
இவற்றை முன் எப்பொழுதும் விட
இப்போது நாடும் உன் அகம்
நீ ஒரு புதியவனாக
அணுகி உணர வேண்டிய உன் அகம்
அறிவதன் சோதனைகள்
அத்தனையும் உன் மேஜை மீது
குவிக்கும் உன் அகம்
உன் அகம் மீண்டும் அறி
அவன் அப்படி
அவன் இப்படி
என்று உன்னைப் பற்றிய
சித்திரங்கள் வரையப்படும்
இவை உன்னைப் பற்றிய
கேலி சித்திரம் ஆகாது
உன்னைக் காத்துக்
கொள்வது நல்லது
இந்த புதிய அகத்தில் உனக்கு
பெரிய பொறுப்பு
உன் வளர்ச்சியின் கதை
உன் நன்றிக்கு உரியவர்கள்
உன்னிடம் உரிமை
எடுத்துக் கொள்ளும் பொழுது
உன்னை மகிழ்விப்பவர்கள்
இவை எல்லாம்
உன் புதியவளுக்கு
நீ சொல்லிட அவளின்
மாற்றத்தின் மீதுள்ள
மேலாண்மை இன்னும் சிறக்கும்
உன்னைப் பற்றிய அறிவு
உன் வேலையோ கல்வியோ
உன் சமூக அங்கீகாரமோ அல்ல
உன்னை பற்றிய அறிவு
உன் மதிப்பீடுகளைப் பற்றியது
அவை
யூகத்திற்கு உட்பட்டவையோ
வியூகத்திற்கு உட்பட்டவையோ அல்ல
முதலில்
நீ அறிவாயா உன் மதிப்பீடுகளை?
உன் பொறுப்புகள் பல மடங்கு விரிகின்றன
இது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணிதம் அல்ல
இரண்டு பரம்பரைகளின் சந்திப்பில் நிகழும்
மிகப் பெரிய ரசாயனம்
உன் சமூகம் திடீரென பல்கி
உன் அடையாளங்களை
கேட்கும் காலம் இது
நீ நினைத்திருந்தது போல
இதற்கு தயாராக இருந்திருக்க மாட்டாய்
அது மட்டும் நிச்சயம்
நீயே இதை உணர்வாய்
சம்பந்தம் பேசாத
சமூக விதிகள்
மதிப்பீடுகள்
உணர்ச்சி ஒப்பந்தங்கள்
அத்தனையும்
உனக்காக
திருமணம் முடியட்டும் என்று
காத்திருந்ததை நீ உணரும் பொழுது
உன் அகம் அந்த
அடையாளங்களில் ஒன்று தான்
மாறுதலின் அஸ்திவாரம்
உன் பலமான முதலீட்டைக்
கேட்கும் காலம் இது
அவள் பிரிந்த அன்னையை
உன்னிலும்
அருகில் இல்லாத பொழுது
எண்ணி வாடும் தந்தையை
உன்னிலும்
காண வேண்டும்
இது ஒரு முதலீடு
கணவன் என்று உன்னை
உணரும் முன்
நண்பனாக உணர வேண்டும்
இது இன்னொரு முதலீடு
அச்சங்களை
பேசாமலேயே அகற்றும்
அங்க மொழி
உன்னிடம் இருக்க வேண்டும்
உன் அகம் ஒரே ஒரு உறவின் வருகையில்
இவ்வளவு மாற்றம் காண்கிறது
உன் மாறிய அகம் அறி
அவள் அகத்தின் பாதிப்புகள்
அவள் வாழ்வில் இருந்து
முழுக்க நீங்க வேண்டியது இல்லை
உண்மையில் நீங்க கூடியது இல்லை
அவள் வீட்டு அருகில்
எப்பொழுதும் செழிப்புடன் இருக்கும்
இடம் பெயர்ந்ததில்
இன்று அவளுக்குக் கிடைக்க அருகிய
கோவில், பூங்கா, நட்பு,
பூக்கள், இசை ஒவ்வொன்றும்
உனக்கு தெரிந்திருக்க வேண்டும்
அவள் அகம் பற்றிய அறிவு தான்
அவள் பற்றிய அறிவு
ரத்தமும் சதையும் நுகர்வுகளும்
தாண்டிய ஜீவனாக அவளை அறிய
அவள் அகம் அறி
அவள் மீது உள்ள பாதிப்புகள்
ஒவ்வொன்றின் மூலப் பொருளும்
உன் வாழ்வில் ஏதோ ஒரு வகையில்
இடம் பெற வேண்டும் என்று அறி
கலைகள், இலக்கியம், நட்பு, சுற்றம்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பொழுதும் அவை
இடம் பெறாமல் போகலாம்
ஆனால் அவற்றுக்கென்று ஒரு
பொழுது உண்டு
ஒன்றும் இல்லா விட்டாலும்
உங்கள் உரையாடலில்
அவற்றுக்கு ஓர் இடம் உண்டு
என்று அறி
அவள் அகம் அறிவது
அவள் வீடு சென்று
வருவதுடன் முடிவது அல்ல
தொடங்குவது
அவள் நட்பு என்பது
அவளைக் கடந்து
பற்பல காலங்களின்
போக்கில் வளர்ந்து
இன்று நிலைத்து விட்ட
ஒரு சிறிய
அவளுக்கு என்றே
உரித்தான சமூகத்தின் நட்பும் ஆனால்
ஓர் அலாதி முழுமை பெறுகிறது
அந்த அவளது மரியாதைக்கு உரிய சமூகம்
உன் மரியாதைக்கும் உரியது
அதில் ஒன்றும் ஆண் பெண் பேதங்கள் இல்லை
உன் நட்பு அவளுக்கு கிடைத்தது
அவளது ஒவ்வொரு நட்பையும் இழப்பதற்காக இல்லை
உன் முயற்சியில் ஒவ்வொரு நட்பும்
உங்கள் இருவரின் நட்பாகத் தொடர வேண்டும்
நட்புகள் அழிந்து விடக் கூடியவை
நீ அவள் அகம் அறியாத பொழுது
வளர்ந்த நட்புகள் முழுக்க முழுக்க
அவள் வாழ்வில் இருந்து நீங்குவது
உன் புதிய நட்புக்காக எப்படி இருக்க முடியும்
நண்பனே, வெற்றிடத்தில் ஏது நட்பு?
உன் உறவு ஒவ்வொன்றும்
நட்பாகும் பொழுது உன்
வாழ்வில் படரும் பசுமை
ஒரு மகத்தான இறை அருள்
அந்த இறை அருள் சூழும்
அகம் அறி!
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக