கோகுலாஷ்டமி அன்று
வராக வைரசின்
உயிரடியையும் மீறி நடந்த
உரியடிகள் கண்டோம்!
என் வாழ்வின்
வெவ்வேறு பருவங்களில்
வளர் பிறைகளில்
முழு நிலவாகத்
திகழ்ந்திருக்கிறது
கோகுலாஷ்டமி
கடவுளை அறிவதற்கு முன்
கலைகளை அறிந்திருக்கிறேன்
மார்கழி என்றால் கோலங்கள்
அஷ்டமி என்றால் அழகிய பாதங்கள்
என் வளரும் பருவத்தில்
அரிசிப் பஞ்சம் ஊரையே
அழுத்தப் பார்த்திருக்கிறேன்
பஞ்சத்தின் விளைவாக
வள்ளிக்கிழங்குகளும்
வேறு உணவுகளும்
உலா வரப் பார்த்திருக்கிறேன்
'எலிக் கரி தின்னச்சொன்ன
காங்கிரஸ் ஆட்சி தேவையா'
என்ற கோஷம் எங்கள் வீட்டு
சுவரில் எழுதப்படப்
பார்த்திருக்கிறேன்
முதிய அறுபதுகளில்
தார் பூசிய தபால் நிலையப் பலகைகளும்
கருப்பு சிவப்பு கொடிகளும்
இத்தகைய சுவரிலக்கியங்களும்
பல்கிப் பரவியது ஒரு
காலம் தன்னை இழந்து
வேறொரு காலத்துக்கு
வழிவிட்டதொரு காட்சி
வீடு முழுதும்
சின்னச்சின்ன பாதங்கள்
கொஞ்சிக் குழைந்து
நடமாடிப் பின்
சமையல் அறைக்கு அடுத்த
பூஜை அறையில் சென்று
சேராத,
வண்ணங்களிலும், வாசனையிலும்
திணறடிக்கும் வகை வகையான
சுபிட்சத்தின் பேரழகு கூடிய
பாரம்பர்யத்தின் இன்னொரு முகமாகப்
பரவி பிரமிக்க வைத்த
இனிப்புகளும் இன்ன பிறவும் வெண்ணையும்
இல்லாத கோகுலாஷ்டமியை
நான் பார்த்ததே இல்லை
எல்லாவற்றையும் விட
மனதில் இன்றும் இருப்பது
நேர் கோடுகளுக்குள் அடங்காத
அந்த குட்டிப்
பாதங்கள்
சில வீடுகளில்
எட்டின் மேல்
விரல் முளைத்திருக்கும்
பாதங்களுக்கு பதில்
எட்டுகள் புலப்படும்
எங்கள் வீட்டில்
தமக்கை தன் உள்ளங்கை
குவித்து வரைந்த
அந்த குட்டிப் பாதங்கள்
எங்களை
ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்
கண்ணன் வந்து
எங்கெங்கும் ஓடி
ஒளிந்து கொள்ள
ஓர் இடம்
சென்று சேர்ந்தது போல
அதில் ஒரு தோற்றம் இருக்கும்
அடுப்பின் அக்னி
சற்று இளைப்பாரியிருக்கலாம்
அக்னிக்கு அசராத எங்கள் பாட்டி
ஓயாது செய்திருப்பாள்
ஒரு நூறு பண்டங்கள்
இந்தக் கண்ணனுக்கு
பாட்டிக்கு கண்ணன்
பிரத்யட்சம் ஆவதோ
பேத்தி
பேரன்களாகவே
அந்த பண்டங்களில்
நா ஊறிய சுவை
மனதை சுண்டி இழுத்த வாசனை
எங்கள் கடந்த காலத்தில்
உறைந்து போன
மீண்டு பெற முடியாத
பிள்ளைப் பருவ அனுபவங்கள்
பண்டங்கள் எங்களைச்
சுற்றி வரும்
நாங்கள் அவற்றைச்
சுற்றி வருவோம்
ஒரு வாரம் ஆனாலும்
இந்த கண்ணன் அமுது
எங்கள் வாழ்க்கையின்
தினசரி அங்கமாக ஜொலிக்கும்
அட்சய பாத்திரம்
விட்டு விட்டுப் போயிருப்பான்!
மெல்ல மெல்ல மறையும்
அந்த குட்டிப் பாதங்கள்
நெஞ்சின் உள்ளே
சொல்லத் தெரியாத
சோகம் ஒன்றையும்
வெற்றிடம் ஒன்றையும்
விட்டுச் செல்லும்
கண்ணா உன்
பாத கமலங்கள்
கோபிகைகளும்
ராதையும்
மீராவும்
அறியாத எங்கள் எளிய
முகவரிகளில்
எப்போது வேண்டுமானாலும்
வருவேன்
அழைக்க வேண்டியதில்லை
என்று சொல்லி விட்டுச் செல்லும்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக