சனி, 5 செப்டம்பர், 2009

ஆசிரியர் தினம் - வாழ்த்துவேன் வணங்குவேன்

இன்று ஆசிரியர் தினம்
மன ஓட்டத்தில்
ஓர் ஆசிரியர் ஓர் ஆசிரியை
என்று தொடங்கி
வாழ்க்கையே ஒரு
மிகப் பெரிய பள்ளிக் கூடமாக
விரிகின்றது

என் ஒன்றாம் வகுப்பு
ஒழிசலில் கழிந்ததாலோ என்னவோ
ஆசிரியர் நினைவுக்கு வரவில்லை
இரண்டாம் வகுப்பு ஆசிரியர்
சுந்தரராமன் காதை மடித்து
சொன்னபடிக் கேட்க வைப்பார்

மூன்றாம் வகுப்பு
ஞானப்ரகாசம் அவர்கள்
கண்டிப்பானவர் அடித்தாரோ
ஞாபகம் இல்லை
ஆனால் அவரைப் பார்த்தவுடன்
அத்தனை சத்தமும் அடங்கி விடும்

நான்காம் வகுப்பு
ராமையா அவர்கள்
தன் உருண்ட தடியால்
மடித்து முன் வைக்கப்பட்ட
மணிக் கட்டைப்
பதம் பார்ப்பார்

ஐந்தாவது பின்
ஞானப்ரகாசம் அவர்கள் தான்
வந்ததாக ஞாபகம்
ஐந்தாம் வகுப்பில்
மனக்கணக்கு எனக்கு
ரொம்பவும் பிடித்திருந்தது
இன்றும் பல கணக்குகள்
எனக்கு மனத்தில் ஓடுவது
அதனால் தான்

ஆராவதில் ராதாகிருஷ்ணன் அவர்கள்
ஏழாவதில் லக்ஷ்மி பீம நரசிம்மன் அவர்கள்
எட்டாவதில் மகா லிங்கம் அவர்கள்
ஒவ்வொருவரும் என் கல்வியின்
அஸ்திவாரத்திற்கு வலு சேர்த்தவர்கள்

ஒன்பதாம் வகுப்பிலிருந்து பலப் பல
ஆசிரியர்களின் பாதிப்புகள்
என் எஸ் அவர்களைப் போல்
விஞ்ஞானம் தர யாராலும் முடியாது
கணிதத்திற்கு ரெங்கசாமி அவர்கள்
சிவாஜி கணேசன் போல ஒரு மிடுக்குடன் உலவுவார்
தலைமை ஆசிரியர் என்பதால் அது மிகவும் பொருத்தம்

ஆங்கிலத்திற்கு வீ ஜே ஏ சார்
ஆங்கிலத்திற்கு மட்டுமா
வாழ்க்கை முழுவதற்கும்
அப்படி ஒரு குரு வாய்க்குமோ

சரித்திரம் பூகோளம் இவையெல்லாம்
மாத்ருபூத நாடார் அவர்களின் நகைச்சுவையுடன்
வெளிப்படும் பொழுது
அந்த வகுப்புகளை நாடாத மாணவர்
யாரும் இல்லை
நகைச்சுவையின் உச்சம்
ஓவிய ஆசிரியர்
காலாண்டு பரீட்சைக்குப் பின்
விடுமுறை முடிந்து பள்ளிக்கு
நாங்கள் திரும்பிய உடன் முதல்
ஓவிய வகுப்பில் எங்களைப்
பார்த்து சொன்னது தான்

உங்களுக்கு ஓவியம் தான் வரலை
தமிழ் ஆவது வரும் என்று
நான் நம்பிக் கொண்டு இருந்தேண்டா
பார்த்தேன் உங்கள் விடைத்தாள்கள் எல்லாம்
கல் அண்டு, கல் ஆண்டு, கால் அண்டு
கேள்வித் தாளைப் பார்த்தாவது
காலாண்டு என்று எத்தனை பேரால்
எழுத முடிந்தது என்று.
உங்கள் தமிழை விட ஓவியமே
தேவலை போ!
கத்திரிக் காயின் முழு வடிவம்
பார்த்தால் ஓவிய வகுப்பு
ஞாபகம் வரும்!


பள்ளிக்குப் போகும் பொழுது
ஒரு புது உற்சாகம் எப்பொழுதும் உண்டு
ஆசிரியர்கள், காற்றோட்டம் நிறைந்த வகுப்புகள்
கிராமங்களில் இருந்து வரும் தோழர்களின்
உணவுகளின் ஒரு தனித்த வாசனை
பிரார்த்தனையில் தொடங்கி விளையாட்டில்
முடிகின்ற ஆரோக்யமான அந்த நாட்களின்
ஹீரோக்கள் எங்கள் ஆசிரியர்கள் தான்

ஆசிரியர்களைக் கண்டால்
நாங்கள் சைக்கிள்களில் இருந்து இறங்கி
வணக்கம் சொல்லி விட்டு
மீண்டும் பெடல்களில் ஏறுவோம்

நான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீது
கம்பீரமாக எழுந்து நிற்கும்
அந்த ஜமீன்தார் உயர் நிலைப் பள்ளியின்
முன்
முழு நீளமும் வீழ்ந்து வணங்க
மனம் ஏங்குகிறது
என் வாழ்வை ஒவ்வொரு
கல்லும் சொல்லிக் கொடுத்து
கோட்டை போல் கட்டிய
அத்தனை ஆசிரியர்களின் பாதங்களையும்
வணங்கவும்
அந்த மகத்தான உள்ளங்களை
வாழ்த்தவும் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக