புதன், 7 அக்டோபர், 2009

இந்தக் கவிதைகள்

நான் இவற்றை
எழுதுவது துர்லபம்

நான் எண்ணங்களின்
மொழிபெயர்ப்புகளை
எழுத எத்தனிக்கும் முன்பு

இவை என்னை
எழுதி விடுகின்றன

என்னை இவை
எழுதுவது போல
அறிமுகப் படுத்துவது இல்லை
எந்த கவிஞனுக்கும்

என் வலைகளில்
என் மௌனங்களில்
என் நிழல்களில்
என் துணையாக
என்னை வரைந்தபடி
என்னை எழுதியபடி
என் கவிதைகள்

இவை என்னை
எழுதியதில்
ஒரு துளி கூட
நான் இவற்றை எழுத
முடிந்தது இல்லை

என் கவிதைகள்
நான் வளர்வதற்கு
முன்பு இருந்தே
உடன் இருந்து
என்னால் புரிந்து கொள்ள
இயலும் தருணம் வரை
எனக்குப் புலப்படாமல்
என் பார்வைக்கு என்றே
காத்திருக்கும் என் கவிதைகள்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னைச் சுற்றிலும்
சூழ்ந்த பசுமை போலும்
என் மீது விழாமலே
நான் காண வீழ்ந்த மழை போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
எனக்கு கருணை புரிந்து
என்னைக் காத்த என் கடவுள் போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னை வளர்த்த
எனக்கு வழி காட்டிய என் அன்னை போலும்

நான் புரிந்து கொள்ளாமலேயே
என்னை எனக்குக் காட்டி
என் உலகமாக உருக்கொண்டு விட்ட
என் கவிதைகள்

என் வாழ்க்கையின்
பிரவாகத்தில்
என்னைத் தேக்கிக் கொண்டு
கரையோரம் நதியின்
புது வெள்ளம்
ஓயட்டும் என்றே
காத்திருக்கும் என் கவிதைகள்

என் மரணத்தின் போது
என் உடைமைகள் என்று
ஒரு சில என் வீட்டில் தங்கலாம்
என்னை இழந்தவர்கள்
எனக்காக அழலாம்
ஊரும் உறவும் அடங்கிய பின்
உற்றுப் பாருங்களேன்

நான் எழுதிய
உங்களிடம் 
வந்து சேராத
சில காகிதங்களில்
கிடைக்கும் கவிதைகள் இருக்கும்

மேலும் என்னை எழுதி
இன்னமும் எழுதும்
ஈரத்துடனும்
தகுந்த நேரத்துடனும்
மரணம் அடையாத
கவிதைகள்
உங்கள் உணர்வுகளின்
சந்திப்புக்காக
உறங்காமல் மௌனம் காத்தபடி
ஓயட்டும் ஒப்பாரிகள் என்றபடி
காத்திருக்கும்

இவை எழுதி
நான் காண
வாழாமல்
நீங்கள் பார்க்கின்ற
'நான்' உடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக