வியாழன், 1 அக்டோபர், 2009

கரை ஆன நதி

தாகத்தில் நதியின்
நா வரண்டது
நதியின் மரணம்
எப்பொழுது வேண்டுமானாலும்
நிகழலாம்
புதைப்பது கடினம்
மணல் படுகையில் இடம் என்று
ஒன்று இல்லை
சொல்லப் போனால்
மணல் கூட இல்லை

கடலில் வீழ்ந்து
காணாமல் போன
மழையை நதி பார்க்க வில்லை
அதனால்
அதன் ஆன்மா சாந்தி
அடைய வாய்ப்பு உண்டு
தகனக் கிரியைகள் எங்கே
நடக்கும்
எந்த நதியின் கரையில்?

நதி ஓய்ந்து போனது
கேள்விகள் ஓய வில்லை!

நதியில் விழுந்து
கடலில் சேர
வாய்ப்பு இல்லை என்று
உணர்ந்த மழை
ஒரு கேள்வியும் இன்றி
மீண்டும்
மீண்டும்
கடலில்
பெய்தது
வெற்றுக் காற்றுகளை
கரைக்கு அனுப்பிய படி

எந்தக் கரை?

கடலுக்குக் கிடைத்த கரை
கடலால் எப்பொழுது வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளப் படும்
நிலையிலும் கிடைத்த கடற் கரை போல்
ஒரு கரை
நதிக்குக் கிடைக்க வில்லை

நகரத்தின்
நரக பெருக்கத்தின்
நுகர்வுகளின்
புழுக்கங்களின்
பாதிப்புகளில்
சுரண்டல்களின்
இறுதிக் கட்டத்தில் 
நதியே கரை ஆனது

கால காலமாக
என், என் தந்தை, என் முன்னோர்கள்
வளர்ந்த பன்னூற்று ஆண்டுகளும் 
தன்னை
வழிபட்ட
சமூகங்களின்
எண்ணற்ற கடவுள்களும்
இடம் பெயர்ந்த 
கரைகளுக்கு இடையே
சுழன்று ஓடிய நதி

இன்று தானே
ஒரு கரையாகக்
கிடந்தது 

காலத்தின் மரண
வாக்கு மூலத்தை
மணலில் எழுதுவதற்காக
விரிக்கப் பட்ட
நீண்ட மடலே போலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக